Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.53,866 கோடியில் கடற்படைக்கு 8 போர் கப்பல்கள்

ரூ.53,866 கோடியில் கடற்படைக்கு 8 போர் கப்பல்கள்

இந்தியக் கடற்படையின் போர் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கப்பல்கள் வாங்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய கடற்படைக்கு ரூ.53,866 கோடி செலவில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த 8 போர் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்காக, இரு பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியக் கடற்படையின் போர் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கப்பல்கள் வாங்கப்படுகின்றன.


இது தொடர்பாக கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் (ஜிஆர்எஸ்இ), கோவா ஷிப்யார்டு நிறுவனம் (ஜிஎஸ்எல்) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இவற்றின்படி, ஜிஆர்எஸ்இ ஐந்து கப்பல்களையும், ஜிஎஸ்எல் மூன்று கப்பல்களையும் கட்டும்.
‘கார்வெட்’ வகையைச் சேர்ந்த இந்தப் போர் கப்பல்களில் நவீன ஏவுகணைகள், ஆயுதங்கள், உணர்வுக் கருவிகள் இடம்பெறும். வான், கடற்பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் உள்ள இலக்குகளை எதிர்கொள்ளும் வகையிலான சிக்கலான பணிகளை இவை மேற்கொள்ளும்.


இந்திய கடற்படையே உள்நாட்டில் வடிவமைத்து, பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் முதல் திட்டம் இது. உள்நாட்டுப் போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திறனில் இது குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அமைச்சகம் கூறியது.


இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இத்திட்டம் இந்திய கப்பல் கட்டுமானத் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும். பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கப்பல் கட்டும் தளங்கள், இந்திய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை இந்தக் கப்பல்களின் கட்டுமானம் வலுப்படுத்தும்.


அடுத்த 10 ஆண்டுகளில் கப்பல் கட்டும் தளங்களில் சுமார் 72 லட்சம் மனித வேலைநாள்களும், துணைத் தொழில்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் 460 லட்சம் மனித வேலைநாள்களும் உருவாகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள், சாதனங்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள், இந்தியர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு இத்திட்டம் ஊக்கமளிக்கும்.


பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமையும். பிரதமர் நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உறுதிப்பாட்டை இது வலுப்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல்கள் படையில் இணைக்கப்பட்டதும், கடல்வழி வர்த்தகப் பாதைகளைப் பாதுகாத்தல், எதிரிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், கடலோரப் பாதுகாப்பு, கரையோரப் போர் நடவடிக்கைகள், கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றில் கடற்படையின் செயல்திறன் கணிசமாக மேம்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.


குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் கடற்படைக்கு, பல்வேறு தளங்களில் செயல்படக்கூடிய இந்த நவீனக் கப்பல்கள் கூடுதல் வலு சேர்க்கும். உள்நாட்டு வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் இத்திட்டம், நாட்டின் கடல்சார் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதுடன், நீண்டகால வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும் என பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
உற்பத்தித் துறை வளர்ச்சி மந்தம் - தொழில்துறை செயல்பாடுகள் குறைவு!
அடுத்த செய்தி
ரூ.1.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: சிக்கிய பெண் பயணி!

தொடர்புடைய செய்திகள்