Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வங்கிக் கடன்கள் ரூ.232.54 லட்சம் கோடியாக உயர்வு

வங்கிக் கடன்கள் ரூ.232.54 லட்சம் கோடியாக உயர்வு

கடன் வளர்ச்சி 17.94 சதவீதமாக உயர்ந்து, வைப்புத்தொகையின் 16.60 சதவீத வளர்ச்சியை முந்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகை காலத்தில் அதிகரித்த கடன் தேவை, வங்கிகளில் நிலவிய உபரி பணப்புழக்கம் ஆகியவற்றின் பின்னணியில், நாட்டின் வங்கிக் கடன்கள் ரூ.232.54 லட்சம் கோடியை எட்டியுள்ளன. ஆண்டு அடிப்படையில் கடன் வளர்ச்சி 17.94 சதவீதமாக உயர்ந்து, வைப்புத்தொகையின் 16.60 சதவீத வளர்ச்சியை முந்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 15 நிலவரப்படி வங்கிகளின் மொத்த வைப்புத்தொகை ரூ.284.37 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 17 அன்று இது ரூ.243.88 லட்சம் கோடியாக இருந்தது.
இதே காலகட்டத்தில் வங்கிகள் வழங்கிய கடன்களின் மதிப்பு ரூ.197.17 லட்சம் கோடியிலிருந்து ரூ.232.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஓராண்டில் மட்டும் கடன் தொகை ரூ.35.37 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.


வைப்புத்தொகை மதிப்பு ஓராண்டில் ரூ.40.49 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. எனினும், வளர்ச்சி விகிதத்தில் வைப்புகளைவிட கடன்கள் 1.34 சதவீதப் புள்ளிகள் முன்னிலையில் உள்ளன. வங்கிகளில் திரட்டப்பட்ட மொத்த வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது, வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு சுமார் 82 சதவீதமாக உள்ளது. இதனால், வைப்புகளும், கடன்களும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.


அக்டோபர் மாத தொடக்கத்தில் வங்கித் துறையில் காணப்பட்ட தாராளமான பணப்புழக்கமும், இந்தியாவின் பண்டிகைக் காலத் தேவைகளும் கடன் வளர்ச்சிக்குப் பின்னணியாகக் கூறப்படுகின்றன.
ரிசர்வ் வங்கியின் சலுகைத் திட்டத்தின்கீழ், வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து வங்கிகள் திரட்டிய அந்நியச் செலாவணி வைப்புகள், வங்கித் துறையின் பணப்புழக்கத்தை அதிகரித்தன.

 அக்டோபர் 1 முதல் 15 வரையிலான காலத்தில் உபரி பணப்புழக்கம் ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.4.5 லட்சம் கோடி வரை இருந்துள்ளது.
மூலதன வரவுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் பணப்புழக்கம் கணிசமாக அதிகரித்தது. ஆகஸ்டில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு, பணப்புழக்கச் சரிசெய்தல் வசதியான எல்ஏஎஃப் கணக்கீட்டின்படி, தினசரி உபரி சராசரியாக ரூ.5.9 லட்சம் கோடியாக இருந்தது.


எல்ஏஎஃப் மூலம் தினசரி சராசரியாக எடுக்கப்பட்ட நிகரத் தொகை, ஜூலையில் ரூ.1.2 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஆகஸ்டில் ரூ.5.8 லட்சம் கோடியாகவும், செப்டம்பரில் ரூ.7.8 லட்சம் கோடியாகவும் உயர்ந்தது.
இதனிடையே, மத்திய, மாநில அரசுப் பத்திரங்களில் வங்கிகளின் முதலீடு 9.64 சதவீதம் அதிகரித்து ரூ.77.32 லட்சம் கோடியானது. கடந்த ஆண்டு இது ரூ.70.53 லட்சம் கோடியாக இருந்தது.


இதில் பெரும்பகுதியான மத்திய அரசுப் பத்திர முதலீடு, ரூ.70.42 லட்சம் கோடியிலிருந்து ரூ.77.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் வழங்கல், வைப்புத் திரட்டல் ஆகியவற்றுடன் அரசுப் பத்திர முதலீடுகளும் அதிகரித்திருப்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

முந்தைய செய்தி
ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
அடுத்த செய்தி
பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி சொகுசு காரை பரிசளித்த நிறுவனம்

தொடர்புடைய செய்திகள்