Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பூமியின் முதல் உயிர்களின் கதை சொல்லும் கற்கள் - அழியும் அபாயத்தில் அரிய சுவடுகள்

பூமியின் முதல் உயிர்களின் கதை சொல்லும் கற்கள் - அழியும் அபாயத்தில் அரிய சுவடுகள்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிளிஃப்டன் ஏரியில் காணப்படும் த்ராம்போலைட் கற்கள்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த அரிய உயிரியல் ஆவணங்களைக் காக்க வேண்டிய அவசியத்தைப் புதிய ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பூமியில் காடுகளும், விலங்குகளும் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே வாழ்ந்த நுண்ணுயிர்களின் தடயங்கள், இன்று மனிதர்களின் காலடியில் சிதையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. 

சாதாரணக் கற்களைப் போலத் தோற்றமளிக்கும் இவை, உண்மையில் நுண்ணுயிர்கள் உருவாக்கிய ‘மைக்ரோபியலைட்டுகள்’. நுண்ணுயிர்கள் தாதுக்களைப் படியவைப்பதாலும், படிவுகளைப் பிடித்து ஒன்றிணைப்பதாலும் இத்தகைய மேடுபோன்ற கட்டமைப்புகள் உருவாகின்றன.


மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பாரா பகுதியில் சுமார் 350 கோடி ஆண்டுகள் பழமையான இவற்றின் புதைபடிவங்கள் உள்ளன. ஷார்க் பே பகுதியில் இன்றும் உயிருள்ள நுண்ணுயிர் கட்டமைப்புகளைக் காணலாம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் அபூர்வப் பாலமாக இவை விளங்குகின்றன.
இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொகுத்த ஆய்வு, ‘அல்செரிங்கா’ இதழில் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலம் ஆக்சிஜன் நிறைந்ததாக மாறியதையும், சிக்கலான உயிரினங்கள் உருவாக வழிபிறந்ததையும் புரிந்துகொள்ள இந்தச் சுவடுகள் உதவுகின்றன.


ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றைத் தாங்கும் இவற்றுக்கு ஒரு கவனக்குறைவான காலடியே பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம்.
2024 மே மாதம், சிலர் கிளிஃப்டன் ஏரியின் தடைசெய்யப்பட்ட பகுதியில் நுழைந்து, 2,000 ஆண்டுகள் பழமையான ‘த்ராம்போலைட்டுகளை’ மிதித்தனர். இத்தகைய சேதங்கள் சில நேரங்களில் மீளமுடியாதவை என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


உயிருள்ள கட்டமைப்புகள் மிக மெதுவாக வளர்வதால், சேதம் சரியாகப் பல தசாப்தங்களோ, நூற்றாண்டுகளோ ஆகலாம். சிலவற்றால் மீளவே முடியாது.
நீரின் தரமாற்றம், பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் வருகை ஆகியவையும் அச்சுறுத்துகின்றன. புதைபடிவங்களை அளவுக்கு அதிகமாகச் சேகரிப்பதும், முறையற்ற அறிவியல் மாதிரி சேகரிப்பும்கூட பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


இவற்றின் அடுக்குகளும், வடிவங்களும் எவ்வாறு உருவாயின என்பதில் இன்னும் பல புதிர்கள் உள்ளன. பழங்கால பேரழிவுகளின்போது உயிர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றின என்பதை அறியவும் இவை உதவக்கூடும்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்தப் பதிவு, பூமியின் ஐந்து பெரும் உயிரின அழிவுகளில் குறைந்தது ஒன்றையாவது கடந்துள்ளது. சில காலகட்டங்களில் இவற்றின் திடீர் பெருக்கம், சுற்றுச்சூழல் சீர்குலைவுடன் தொடர்புடையதாக இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.


எனினும், ஆஸ்திரேலியாவில் இத்தகைய புவியியல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளும் நிதிவசதியும் போதுமானதாக இல்லை என ஆய்வு குறிப்பிடுகிறது.
கல்லில் எழுதப்பட்ட பூமியின் முதல் உயிர்க்கதையைப் பாதுகாத்தால்தான், அதன் படிக்கப்படாத பக்கங்களை எதிர்காலத் தலைமுறைகள் திறக்க முடியும். அதற்கான நடவடிக்கைகள் இப்போதே தேவை என்பதே ஆய்வின் முக்கியத் தகவல்.



முந்தைய செய்தி
பனி படர்ந்த சாலைகளில் கார் ஓட்ட ஆர்வம் காட்டும் செல்வந்தர்கள்
அடுத்த செய்தி
எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை; இடைத்தேர்தலுக்கு அவரே காரணம்: அமைச்சர் நிர்மல்குமார்

தொடர்புடைய செய்திகள்