Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தாக்குதலை நிறுத்த ஹவுதிகளுக்கு 100 கோடி டாலர் வழங்க முன்வந்த சவுதி அரேபியா?

தாக்குதலை நிறுத்த ஹவுதிகளுக்கு 100 கோடி டாலர் வழங்க முன்வந்த சவுதி அரேபியா?
AI புகைப்படம்

ஏமனில் ஹவுதி அமைப்புக்கும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

சவுதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்காக, ஏமனின் ஹவுதி அமைப்புக்கு ஈரான் வழியாக 100 கோடி டாலர் வழங்க சவுதி முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், சவுதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு நேற்று சென்றார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், துருக்கி உளவுத்துறைத் தலைவர் இப்ராஹிம் காலின் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

ஏமனில் ஹவுதி அமைப்புக்கும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. ஏமன் அரசுக்கு சவுதி ஆதரவு அளித்து வரும் நிலையில், ஹவுதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. 2022 போர் நிறுத்தத்துக்குப் பிறகு, ஓமன் வழியாக சவுதியும் ஹவுதிகளும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
ஆனால், கடந்த மாதம் ஏமனின் செங்கடல் கடற்கரையோர முக்கியப் பகுதிகளை ஹவுதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து மோதல் மீண்டும் தீவிரமடைந்தது. சவுதி படைகள் தாக்குதலை அதிகரிக்க, சவுதி நகரங்களையும் முக்கிய கட்டமைப்புகளையும் ஹவுதிகள் தாக்கத் தொடங்கினர். ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களால் உயிரிழப்புகளும், விமானப் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டன.

இந்தச் சூழலில், தெஹ்ரான் பேச்சுவார்த்தையின் பின்னணியில் நிதி உதவித் திட்டம் இருப்பதாக இஸ்ரேலின் ‘இஸ்ரேல் ஹயோம்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வளைகுடா தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியான அச்செய்தியின்படி, ஹவுதிகள் தாக்குதலை நிறுத்துவதற்கு ஈடாக ஈரான் வழியாக 100 கோடி டாலர் வழங்குவது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் பயணம் செய்த ராணுவ விமானத்திலேயே பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்திருந்தாலும், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதை சவுதி அதிகாரி உறுதிப்படுத்தவில்லை.

முன்னதாக எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, ஹவுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், குடிமக்களுக்கான கட்டமைப்புகளைப் புதுப்பிக்கவும் நிதி அளிப்பது விவாதிக்கப்பட்டதாக அந்தச் செய்தி கூறுகிறது. இதற்கிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காகவே டெஹ்ரான் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நாளிலும், சவுதி மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் கூறியுள்ளனர்; இதை சவுதி உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

சவுதியின் பாதுகாப்புக்கு ராணுவ உதவி வழங்க எகிப்துஒப்புதல் அளித்துள்ளது. ஒருபுறம் தாக்குதலும் மறுபுறம் தூதரக முயற்சிகளும் தொடரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 
விமான நிலையமே குறி

அக்டோபர் தொடக்கம் முதல் 15-ம் தேதி வரை சவுதி தலைநகர் ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் 20 முறை தாக்குதல் நடத்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 17 பேர் உயிரிழந்தனர். அபா, ஜசான், தம்மாம் விமான நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகின.
அக்டோபர் 22 நிலவரப்படி, விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களில் 22 பேர் உயிரிழந்ததாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது. இவர்களில் இந்தியர் ஒருவரும் அடங்குவார்.
இதனிடையே, ரியாத் விமான நிலையம் மற்றும் எண்ணெய் உந்துதல் நிலையங்களை அக்டோபர் 26-ல் தாக்கியதாக ஹவுதிகள் கூறினர். இதை சவுதி உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. தாக்குதலால் விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
 

முந்தைய செய்தி
இந்திய கோகோ கோலா நிறுவனத்தின் ஐபிஓ
அடுத்த செய்தி
இந்தியப் பங்குச் சந்தை - ரூ.3.08 லட்சம் கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

தொடர்புடைய செய்திகள்