Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஸ்டார்லிங்க் இணைய சேவையில் புதிய கட்டுப்பாடு: உக்ரைனுக்கு வந்த சோதனை!

ஸ்டார்லிங்க் இணைய சேவையில் புதிய கட்டுப்பாடு: உக்ரைனுக்கு வந்த சோதனை!

ரஷ்யாவின் அதிவேக ஜெட் ட்ரோன்களை இடைமறிக்கும் உக்ரைன் ட்ரோன்களுக்கு இந்த கட்டுப்பாடு பெரும் தடையாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

எதிரி ட்ரோனை விரட்டிச் செல்ல வேகம் தேவை; வேகமெடுத்தாலோ இணைய இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் ட்ரோன் நடவடிக்கைகளை இப்படியொரு இக்கட்டில் நிறுத்தியுள்ளது. போர்க்களத்தில் உருவான இந்தச் சிக்கல், இப்போது அமெரிக்க அரசுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான பொறுப்பு குறித்த சர்ச்சையாகவும் விரிந்துள்ளது.

ரஷ்யப் படையெடுப்பு தொடங்கிய 2022 முதல், உக்ரைனின் தகவல்தொடர்புக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் முக்கிய ஆதாரமாக உள்ளது. படைப்பிரிவுகள் பேசிக்கொள்ளவும், களநிலவரங்களைப் பகிரவும், ட்ரோன்களை இயக்கவும் இந்த இணைப்பு உதவுகிறது. அதனால், சேவையில் ஏற்படும் மாற்றம் போர்முனையில் உடனடியாக எதிரொலிக்கிறது.

தற்போதைய பிரச்சினை, இணையத்தில் தகவல் வந்து சேருவதில் ஏற்படும் வழக்கமான தாமதமல்ல. ராணுவப் பயன்பாட்டுக்கான ‘ஸ்டார் ஷீல்டு’ சேவையுடன் இணைக்கப்பட்ட கருவிகள், மணிக்கு சுமார் 160 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் பறக்கும்போது தொடர்பை இழப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் ட்ரோன்களின் வேகத்தைக் குறைக்க வேண்டியுள்ளது; அவற்றை எதிரிகள் தாக்குவதும், தவிர்ப்பதும் எளிதாகிறது.
ரஷ்யாவின் அதிவேக ஜெட் ட்ரோன்களை இடைமறிக்கும் உக்ரைன் ட்ரோன்களுக்கு இந்த கட்டுப்பாடு பெரும் தடையாகியுள்ளது. முன்னணிப் படையினருக்கு உணவு, குடிநீர், உபகரணங்களை எடுத்துச் செல்லும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இணைப்புக்கான கட்டுப்பாடுகள் நீடிப்பதாக நேற்று முன்தினமும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சேவைக்கான செலவை உக்ரைன் மட்டும் சுமக்கவில்லை. உக்ரைன் பயன்படுத்தும் ஏராளமான ஸ்டார்லிங்க் கருவிகளின் சந்தாக்களுக்காக ஆண்டுக்கு சுமார் ஐந்து கோடி அமெரிக்க டாலர் செலுத்துவதாக போலந்து தெரிவித்துள்ளது. ஜெர்மனியும், கருவிகள் மற்றும் சேவைக்கான செலவில் பங்களிக்கிறது. தாங்கள் நிதியளிக்கும் இணைப்புகள் முறையாக இயங்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.

ஆனால், கட்டுப்பாட்டுக்கு யார் பொறுப்பு என்பதில்தான் குழப்பம். ஸ்டார் ஷீல்டு அமைப்புகள் அமெரிக்க அரசுக்குச் சொந்தமானவை; வேகம், பயன்பாடு தொடர்பான வரம்புகளை அமெரிக்க ராணுவமும் இறுதியில் அதிபருமே தீர்மானிப்பதாக மஸ்க் எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார். இது மஸ்க் முன்வைக்கும் விளக்கமாகும்.
இதற்கு மாறாக, சேவையில் மாற்றங்களைச் செய்ய ட்ரம்போ, அமெரிக்க அரசின் வேறு எவருமோ கோரவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஒப்பந்த நிபந்தனைகளின்படி செயல்படும் தனியார் நிறுவனத்தின் முடிவுகளை அரசு நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, மஸ்க்தான் கட்டுப்பாட்டுக்கு உத்தரவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், உத்தரவு பிறந்த விதம் குறித்த முரண்பாடுகள் தீரவில்லை.
கட்டுப்பாடுகளை நீக்கப் பேச்சுவார்த்தை நடத்தும் உக்ரைன், மாற்றுச் செயற்கைக்கோள் சேவைகளையும் ஆராய்கிறது. பணம் செலுத்தினாலும், தேவையான நேரத்தில் இணைப்பு கிடைக்குமா என்ற கேள்வி கூட்டாளிகளிடமும் எழுந்துள்ளது.

போர்க்களத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. ஆயுதத்தை வாங்கிவிட்டால் மட்டும் பாதுகாப்பு உறுதியாகிவிடாது; அதை இயக்கும் தொடர்பும் தடையின்றி கிடைக்க வேண்டும். உக்ரைனின் வானில் பறக்கும் ட்ரோன்கள், தரையில் இருக்கும் இந்தத் தொழில்நுட்பச் சார்பின் முக்கியத்துவத்தை உலகுக்குக் காட்டுகின்றன.

முந்தைய செய்தி
எழுத்தாளருக்கு ஆண்டுக்கு ரூ.3.25 கோடி சம்பளம்! ஏஐநிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
அடுத்த செய்தி
முத்திரைத்தாள் பதிவில் மாற்றங்கள் செய்ய அரசுக்கு கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்