Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சந்தேகத்தால் சரிந்தது அமெரிக்க பங்குச் சந்தை: பல லட்சம் கோடி முதலீடு... லாபம் எங்கே?

சந்தேகத்தால் சரிந்தது அமெரிக்க பங்குச் சந்தை: பல லட்சம் கோடி முதலீடு... லாபம் எங்கே?

அக்டோபர் 30, 2026 அன்று நாஸ்டாக் குறியீடு 2.86 சதவீதமும், எஸ்&பி 500 குறியீடு 1.82 சதவீதமும், டவ் ஜோன்ஸ் குறியீடு 1.09 சதவீதமும் சரிந்தன. இன்டெல் நிறுவனப் பங்குகள் சுமார் 29 சதவீதம் வீழ்ச்சியடைந்தன

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்கள் கொட்டிக்குவிக்கும் பல லட்சம் கோடி டாலர் முதலீடுகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் விற்பனை தீவிரமாக இருந்தது.

குறிப்பாக, தொழில்நுட்பப் பங்குகள் சரிந்ததால் நாஸ்டாக் குறியீடு 2.86 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஜூன் 5-ம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான இன்டெல், அமேசான் வெளியிட்ட காலாண்டு நிதி முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. இதையடுத்து, இன்டெல் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 28.6 சதவீதம் சரிந்தன. என்விடியா பங்குகள் 4.2 சதவீதமும், ஏஎம்டி பங்குகள் 10.9 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. செமி கண்டக்டர் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட குறியீடு 7.2 சதவீதம் சரிந்தது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தக் குறியீடு 15 சதவீதத்துக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்கள், கணினி உபகரணங்கள் மற்றும் அதிநவீன சிப்களுக்காக நிறுவனங்கள் பெரும் தொகையைச் செலவிட்டு வருகின்றன. ஆனால், இந்த முதலீடுகள் எப்போது லாபமாகத் திரும்பும் என்பது குறித்த தெளிவு இல்லை. இதுவே தற்போதைய சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கணினி சேவையகங்களைத் தயாரிக்கும் டெல் நிறுவனப் பங்குகள் 10.8 சதவீதமும், ஹெச்பி நிறுவனப் பங்குகள் 9.6 சதவீதமும் சரிந்தன.
அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியில் செமி கண்டக்டர் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிதிகளும் தப்பவில்லை. எஸ்.ஓ.எக்ஸ்.எக்ஸ். நிதி 8.2 சதவீதமும், எஸ்.எம்.எச். நிதி 7 சதவீதமும் சரிந்தன.
அமெரிக்காவின் முக்கியமான மூன்று பங்குச்சந்தைக் குறியீடுகளும் சரிவுடன் நிறைவடைந்தன. டவ் ஜோன்ஸ் குறியீடு 572.25 புள்ளிகள் குறைந்து 51,770.31 புள்ளிகளாக முடிந்தது. எஸ் அண்ட் பி 500 குறியீடு 140.32 புள்ளிகள் சரிந்து 7,580.07 புள்ளிகளையும், நாஸ்டாக் குறியீடு 747.73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,437 புள்ளிகளையும் எட்டின. ஜூன் மாதத்துக்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தையில் பதிவான மிக மோசமான ஒரு நாள் சரிவாக இது அமைந்தது.
அக்டோபர் 6-ம் தேதி எட்டிய உச்சத்திலிருந்து நாஸ்டாக் குறியீடு தற்போது 7.8 சதவீதம் சரிந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் எஸ் அண்ட் பி 500 மற்றும் நாஸ்டாக் குறியீடுகள் இழப்பைச் சந்தித்துள்ளன. அதேநேரத்தில் டவ் ஜோன்ஸ் குறியீடு மாதாந்திர அடிப்படையில் ஏற்றத்துடன் முடிந்தது.
இதற்கிடையே, அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில், செவ்ரான் ஆகியவை எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் ஈட்டியதால் அவற்றின் பங்குகள் முறையே 2.2 சதவீதம், 2.8 சதவீதம் உயர்ந்தன.
மேலும், உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளமான பைனான்ஸில் இருந்து 630 கோடி டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துகள் திருடப்பட்டதாக வெளியான தகவல்களும் கிரிப்டோ தொடர்பான நிறுவனப் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. காயின்பேஸ், ஸ்ட்ராட்டஜி, ராபின்ஹுட் நிறுவனப் பங்குகள் 7.2 முதல் 10.6 சதவீதம் வரை சரிந்தன.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட எஸ் அண்ட் பி 500 பட்டியலில் உள்ள 299 நிறுவனங்களில் 82 சதவீத நிறுவனங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வருவாய் ஈட்டியுள்ளன. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு முதலீடுகளின் மீதான அச்சம் சந்தையைத் தொடர்ந்து அழுத்தி வருகிறது.

முந்தைய செய்தி
Railways to replace LPG, diesel with PNG at 22 sites under pact with IGL
அடுத்த செய்தி
நிதி திரட்டும் இலக்கை ரூ.94,000 கோடி குறைத்தது ஓபன் ஏஐ!

தொடர்புடைய செய்திகள்