Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.45.72 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு

ரூ.45.72 லட்சம் கோடி சந்தை மதிப்பு இழப்பு

சீனத் தொழில்நுட்பப் பங்குகளில் குவிந்த முதலீடுகள்

பகிரவும் WhatsApp Facebook

 செயற்கை நுண்ணறிவுதான் எதிர்காலம் என்ற நம்பிக்கையில் சீனத் தொழில்நுட்பப் பங்குகளில் குவிந்த முதலீடுகள், தற்போது கடுமையான சரிவைச் சந்திக்கின்றன. நிறுவனங்களின் வளர்ச்சி எதிர்பார்ப்புக்கும், உண்மையான லாபத்துக்கும் இடையிலான இடைவெளி, முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

ஏஐ, செமிகண்டக்டர் நிறுவனங்கள் இடம்பெறும் ‘ஸ்டார் 50’ குறியீடு, நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் சுமார் 40 சதவீதம் வீழ்ந்துள்ளது. சுமார் 480 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.45.72 லட்சம் கோடியாகும். பங்கு விலைச் சரிவால் ஏற்பட்ட மதிப்பிழப்பே இந்தத் தொகை. நிறுவனங்களின் செயல்பாட்டு நஷ்டம் அல்ல.


ஒளியியல் சாதன நிறுவனங்களான ஜோங்ஜி இன்னோலைட், ஈஆப்டோலிங்க் பங்குகள் ஜூன்–ஜூலை உச்சங்களிலிருந்து சுமார் 60 சதவீதம் சரிந்துள்ளன. ஏஐ சிப் நிறுவனங்களான மெட்டாஎக்ஸ், மூர் திரெட்ஸ் பங்குகள் ஜூலையிலிருந்து சுமார் பாதியாகக் குறைந்துள்ளன. ரோபோ தயாரிப்பாளரான யுனிடிரீ பங்குகளும் ஆகஸ்ட் பட்டியலுக்குப் பிறகு சுமார் 50 சதவீதம் வீழ்ந்துள்ளன.


அளவுக்கு மீறிய பங்கு மதிப்பீடுகள், எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா என்ற சந்தேகம், அமெரிக்கத் தரவு மையங்களில் சீனக் கருவிகளுக்குக் கட்டுப்பாடுகள் வரக்கூடும் என்ற அச்சம் ஆகியவை விற்பனை அழுத்தத்துக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
சரிவு நேற்று முன்தினமும் (அக்.29) தொடர்ந்தது. ‘ஸ்டார் 50’ குறியீடு அன்றைய வர்த்தக முடிவில் 4.3 சதவீதம் குறைந்தது. யுனிடிரீ நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 70 சதவீதம் உயர்ந்தபோதும் நிகர லாபம் குறைந்ததால், அதன் பங்கு 4.8 சதவீதம் சரிந்தது.


நம்பிக்கையை மீட்க, சந்தை நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதாக சீனப் பத்திர ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் வூ சிங் தெரிவித்துள்ளார். நீண்டகால முதலீடுகளை அதிகரித்தல், நிறுவனங்களின் பங்குத் திரும்ப வாங்குதலை ஊக்குவித்தல், அபாயக் கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், 18 புதிய ஈடிஎஃப் திட்டங்களின் பதிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.


இதற்கு முன்னதாக நடந்த ஆலோசனையில், ஈவுத்தொகையை அதிகரித்தல், கூடுதல் கொள்கைக் கருவிகளை ஆராய்தல் போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. எனினும், முதலீட்டாளர்களின் இழப்பை ஈடுகட்டும் தனித் தொகுப்பு இந்த அறிவிப்புகளில் இடம்பெறவில்லை.
இதற்கிடையே, ஏஐ நினைவகச் சிப்களுக்கான தேவை வலுவாக இருப்பதாக சாம்சங் தெரிவித்துள்ளது. அதன் மூன்றாம் காலாண்டுச் செயல்பாட்டு லாபம் 107.4 டிரில்லியன் வோன். 2027-லும் தேவை விநியோகத்தை மிஞ்சும் என்பது நிறுவனத்தின் எதிர்பார்ப்பு.

ஆட்டம் காணும் அமெரிக்க பங்குகள்
ஏஐ முதலீட்டு உற்சாகத்துக்கு அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் சோதனை ஏற்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி வெளியான தகவலின்படி, ஏஐ பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தால், நாஸ்டாக் குறியீடு மூன்று வாரங்களுக்கு முந்தைய உச்சத்திலிருந்து சுமார் 6 சதவீதம் சரிந்திருந்தது.


தரவு மையங்கள், சிப்கள், கட்டமைப்பு வசதிகளில் கொட்டப்படும் பணம் எப்போது லாபமாகத் திரும்பும் என்ற கவலை முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. அதிக மதிப்பீடுகளும் நிதித் திரட்டல் செலவுகளும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

சீன ஏஐ பங்குகளில் கரையும் முதலீடு
நிறுவனம்                                   பங்கு விலைச் சரிவு
ஜோங்ஜி இன்னோலைட்              சுமார் 60%
ஈஆப்டோலிங்க் டெக்னாலஜி      சுமார் 60%
மெட்டாஎக்ஸ் இன்டகிரேட்டட் சர்க்யூட்ஸ் சுமார் 50%
மூர் த்ரெட்ஸ் டெக்னாலஜி          சுமார் 50%
யூனிட்ரீ                                             சுமார் 50%
சிஎக்ஸ்எம்டி                                 25%-க்கும் மேல்


முந்தைய செய்தி
ரூ.95,250 கோடி கடன் பெறுகிறது அராம்கோ
அடுத்த செய்தி
ஈரானுடன் போரை தவிர்க்க வான்ஸ் ரகசிய முயற்சி

தொடர்புடைய செய்திகள்