Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிறுவன முதலீட்டாளர்களுடனான அழைப்புப் பதிவு கட்டாயம்

நிறுவன முதலீட்டாளர்களுடனான அழைப்புப் பதிவு கட்டாயம்

செபி விதிமுறை தளர்வு

பகிரவும் WhatsApp Facebook

நிறுவன முதலீட்டாளர்களுடனான உரையாடல்களை ஆய்வு பகுப்பாய்வாளர்கள் கட்டாயமாக ஒலிப்பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தளர்த்தியுள்ளது.

விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான சுமையைக் குறைத்து, தொழில் மேற்கொள்வதை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செபி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, நிறுவன முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகளை, ஆய்வு பகுப்பாய்வாளர்களும், ஆய்வு நிறுவனங்களும் இனி கட்டாயமாகப் பராமரிக்க வேண்டியதில்லை.


எனினும், அனைத்து வாடிக்கையாளர்களுடனும் மேற்கொள்ளப்படும் சேவை தொடர்பான கலந்துரையாடல்களின் பதிவுகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தொடரும். வாடிக்கையாளராக இணைவதற்கு முன்பு சேவைகள் குறித்து விசாரிக்கும் வருங்கால வாடிக்கையாளர்களுடனான உரையாடல்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
வாடிக்கையாளர் எழுதி கையொப்பமிட்ட ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், அழைப்புகளின் ஒலிப்பதிவுகள் அல்லது சட்டப்படி சரிபார்க்கக்கூடிய பிற வழிகளில் இத்தகைய பதிவுகளை வைத்திருக்கலாம் என செபி விளக்கமளித்துள்ளது.


இந்தப் பதிவுகள் ஐந்து ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும். ஏதேனும் சர்ச்சை எழுந்தால், அது தீர்க்கப்படும் வரை தொடர்புடைய பதிவுகளை அழிக்காமல் பாதுகாப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட பதிவுகளைத் தொடர்ந்து பாதுகாக்குமாறு செபி உத்தரவிட்டால், அந்த உத்தரவின்படியும் அவற்றைப் பராமரிக்க வேண்டும்.


மின்னஞ்சல் போன்ற மின்னணுத் தடம் கிடைக்கக்கூடிய வழிகளில் வாடிக்கையாளர்களுடனான தொடர்பு நடைபெறும்போது, தனியாக அழைப்பு ஒலிப்பதிவு தேவையில்லை என்றும் சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
நிறுவன முதலீட்டாளர்களுடனான அழைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தளர்வு, வாடிக்கையாளர் தொடர்புகள் அனைத்திற்குமான பதிவுப் பராமரிப்புக் கடமையை நீக்கவில்லை. சேவைகள் தொடர்பாக நடைபெற்ற உரையாடல்களுக்கு சட்டப்படி சரிபார்க்கக்கூடிய ஆதாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே திருத்தப்பட்ட விதிமுறையின் அடிப்படையாகும்.


அதாவது, நிறுவன முதலீட்டாளருடன் சேவை குறித்து பேசப்பட்டிருந்தால், அந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும், அனுமதிக்கப்பட்ட பிற வழிகளில் அதன் பதிவை வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளரின் கையொப்பமிட்ட எழுத்துப்பூர்வ ஆவணம் அல்லது மின்னஞ்சல் உள்ளிட்ட ஆதாரங்கள் இதற்குப் பயன்படலாம்.
இவ்வாறு பராமரிக்கப்படும் பதிவுகளுக்கும் ஐந்தாண்டு பாதுகாப்புக் காலம் பொருந்தும். சர்ச்சை மற்றும் செபியின் தனிப்பட்ட உத்தரவு தொடர்பான பாதுகாப்புக் கடமைகளும் தொடர்ந்து பொருந்தும் என சுற்றறிக்கை விளக்குகிறது.


முந்தைய செய்தி
அமீரக கடற்கரைகளை மூடவைத்த எண்ணெய் கசிவு
அடுத்த செய்தி
10வது வாரமாக வெளியேறிய அந்நிய முதலீடு - நீடிக்கும் சரிவு அபாயம்

தொடர்புடைய செய்திகள்