Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெருமழை பாதிப்புக்கு ‘குட் பை’ - வருகிறது ‘ரெயின் சென்னை’ ஒப்பந்தம்

பெருமழை பாதிப்புக்கு ‘குட் பை’ - வருகிறது ‘ரெயின் சென்னை’ ஒப்பந்தம்
பெருமழை பாதிப்புக்கு ‘குட் பை’ - வருகிறது ‘ரெயின் சென்னை’ ஒப்பந்தம்

சென்னையில் மழை என்பது வெறும் இயற்கை நிகழ்வு அல்ல, சில நேரங்களில் தொழில்களின் லாப-நஷ்ட கணக்கையே தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது.

பகிரவும் WhatsApp Facebook


மழை காரணமாக ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து வணிக நிறுவனங்களைப் பாதுகாக்க, புதிய ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் சென்னையில் அறிமுகமாகியுள்ளது.

பங்குச் சந்தைகளில் தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலையை வைத்து 'ஃபியூச்சர்ஸ்' (Futures) வர்த்தகம் செய்வது போல, இது சென்னையின் பருவமழையை மையமாகக் கொண்டு செய்யப்படும் நிதி ஒப்பந்தம். தேசிய சரக்கு மற்றும் டெரிவேட்டிவ்ஸ் பரிவர்த்தனை நிறுவனமான என்சிடிஇஎக்ஸ் (NCDEX), சென்னையை அடிப்படையாகக் கொண்ட ‘ரெயின் சென்னை’ என்ற பெயரில் மழை சார்ந்த ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் (செப்டம்பர் – டிசம்பர்) அதீத மழை காரணமாகவோ அல்லது போதிய மழை இல்லாததினாலோ நஷ்டத்தைச் சந்திக்கும் வணிக நிறுவனங்கள், தங்களது நிதி இழப்பை ஈடுகட்டவும் (Hedging/Risk Management) அபாயத்தைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும். இது வழக்கமான காப்பீட்டுத் திட்டம் அல்ல. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் மழை சார்ந்த ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம். மழை காரணமாக உருவாகும் நிதி அபாயத்தை நிர்வகிப்பதே இதன் பிரதான நோக்கம்.

இதில் பங்கேற்க விரும்பும் முதலீட்டாளர்கள், சரக்கு வர்த்தகக் கணக்கு (Commodity Trading Account) ஒன்றை உருவாக்கி, தரகு நிறுவனம் (Broker) நிர்ணயிக்கும் தொடக்க மார்ஜின் (Margin) தொகையைச் செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் லாட் (Lot) முறையில் வர்த்தகம் செய்யப்படும். இதில் 1 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ₹50 என மதிப்பிடப்படுகிறது.

மேலும், இதில் தங்கம், எண்ணெய் போன்ற எந்தவொரு பொருளையும் நேரடியாக வாங்கவோ விற்கவோ வேண்டிய அவசியமில்லை. ஒப்பந்த கால முடிவில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ சென்னை மழை அளவு தரவுகளின் அடிப்படையில் லாப–நஷ்டங்கள் கணக்கிடப்பட்டு, முழுத் தொகையும் ரொக்கமாகவே (Cash Settlement) கணக்கில் வரவு-செலவு வைக்கப்படும்.

முன்னதாக, இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையில், ஐ.ஐ.டி பாம்பேயுடன் (IIT Bombay) இணைந்து உருவாக்கப்பட்ட நாட்டின் முதலாவது வெதர் டெரிவேட்டிவ் ஒப்பந்தமான ‘ரெயின் மும்பை’ (RAINMUMBAI)-ஐ என்சிடிஇஎக்ஸ் அறிமுகப்படுத்தியிருந்தது.

தற்போது இந்த வரிசையில் ‘ரெயின் சென்னை’ (RAINCHNNAI)-ம் இணைந்ததன் மூலம், இந்தியாவின் இரு பெரும் பருவமழைக் காலங்களான தென்மேற்குப் பருவமழை (ஜூன் – செப்டம்பர்) மற்றும் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர்–டிசம்பர்) ஆகிய இரண்டிலுமே மழையளவு சார்ந்த நிதி அபாயங்களை முழுமையாகக் கையாள்வதற்கான வழிவகை (Rainfall Risk Management) தொழில்துறைக்குக் கிடைத்துள்ளது.


முந்தைய செய்தி
தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடையா? - மின்சார வாரியம் விளக்கம்
அடுத்த செய்தி
95 அம்ச வழிகாட்டுதல் பட்டியல்: 417 பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை

தொடர்புடைய செய்திகள்