Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.4.47 லட்சம் கோடியை கடந்தது அமெரிக்காவின் செலவு

ரூ.4.47 லட்சம் கோடியை கடந்தது அமெரிக்காவின் செலவு

இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரியில் ஈரான் மீதான போரை டிரம்ப் தொடங்கினார்.

பகிரவும் WhatsApp Facebook

விரைவில் முடிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய ஈரான் போர், அமெரிக்காவுக்கு ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தியுள்ளது. ஜூலையில் வெளியான மதிப்பீட்டைவிட இது 25 சதவீதத்துக்கும் அதிகம் என ஊடகங்களுக்குக் கிடைத்த பென்டகன் கணக்கீடு தெரிவிக்கிறது.

போரில் பயன்படுத்தித் தீர்ந்த ஆயுதங்களை மீண்டும் வாங்குவதற்கே பெரும்பகுதி தொகை தேவைப்படுகிறது. வெடிமருந்துகள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை நிரப்ப சுமார் ரூ.2.76 லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இழந்த ராணுவத் தளவாடங்களை மாற்றுவதற்கு ரூ.57,072 கோடிக்கும் அதிகமாகத் தேவைப்படும். விமானங்கள், ஆளில்லா விமானங்களின் இழப்புகளும் இதில் அடங்கும்.


இந்த தொகையுடன் செலவு முடிந்துவிடாது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் சேதமடைந்த அமெரிக்க ராணுவத் தளங்களைச் சீரமைக்க வேண்டியுள்ளது. அதற்கான செலவு புதிய மதிப்பீட்டில் தெளிவாகக் கணக்கிடப்படவில்லை. இந்தக் கணக்கீட்டை பென்டகன் பொதுவெளியில் வெளியிடவில்லை.
கடந்த ஜூலையில் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்த செலவு மதிப்பீடு, ரூ.3.57 லட்சம் கோடியாகும். தற்போது அது மேலும் உயர்ந்துள்ளது. 

விமானங்களை இயக்குவது, படையினருக்கான ஆதரவு, இணையவழிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து பணம் செலவிடப்படுகிறது. ஆயுதங்களையும் தளவாடங்களையும் மீண்டும் வாங்குவதற்கான தேவையும் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரியில் ஈரான் மீதான போரை டிரம்ப் தொடங்கினார்.

 முதலில் விலையுயர்ந்த ஏவுகணைகளால் ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கிவிட்டு, பின்னர் குறைந்த விலையிலான குண்டுகளைப் பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால், ஏப்ரல் போர்நிறுத்தம், சில பாதுகாப்பு அமைப்புகளையும் நிலத்தடி ஆயுதக் கிடங்குகளையும் மீண்டும் பயன்படுத்த ஈரானுக்கு அவகாசம் அளித்தது.
போர் நீடித்தால் செலவு மேலும் அதிகரிக்கும். அமெரிக்க நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகத்தின் செப்டம்பர் அறிக்கையின்படி, மோதலின் தீவிரத்தைப் பொறுத்து மாதந்தோறும் சுமார் ரூ.19,024 கோடி முதல் ரூ.28,536 கோடி வரை கூடுதலாகத் தேவைப்படலாம். தாக்குதல்கள் அதிகரித்தால் இதைவிடவும் செலவு உயரக்கூடும்.


எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் கையிருப்பு பல ஆண்டுகளுக்குக் குறைந்த நிலையில் நீடிக்கலாம் என பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. பயன்படுத்திய ஆயுதங்களை மீண்டும் உற்பத்தி செய்து நிரப்புவதும் அமெரிக்காவுக்கு நீண்டகாலச் சவாலாக உள்ளது.


நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் குடியரசுக் கட்சிக்கு, போர் அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு, அக்கட்சி வேட்பாளர்களுக்கான ஆதரவையும் டிரம்பின் செல்வாக்கையும் பாதித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்த பெரும்பான்மையுடன் உள்ள அக்கட்சிக்கு, தேர்தல் முக்கியச் சோதனையாக அமைந்துள்ளது.

முந்தைய செய்தி
Free coaching for railway exams in Karur
அடுத்த செய்தி
காகித ஆலைகளுக்கு நிலக்கரி ஒதுக்கீட்டில் முன்னுரிமை தேவை

தொடர்புடைய செய்திகள்