Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

லாரி ஓட்டுநர்கள் போராட்டம் எதிரொலி: இத்தாலியில் பாஸ்தா உற்பத்தி முடக்கம்

லாரி ஓட்டுநர்கள் போராட்டம் எதிரொலி: இத்தாலியில் பாஸ்தா உற்பத்தி முடக்கம்

கம்பானியா மாகாணத்தில் செயல்படும் ரும்மோ நிறுவனம், மூலப்பொருள்கள் கிடைக்காததால் கடந்த 19-ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும் WhatsApp Facebook

இத்தாலியில் லாரி ஓட்டுநர்கள் நடத்தி வரும் போராட்டத்தால், அந்நாட்டின் பிரபல உணவுப் பொருளான பாஸ்தா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து இத்தாலியில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான கோதுமை, ரவை உள்ளிட்ட மூலப்பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கிய பாஸ்தா தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கவும், நிறுத்தவும் வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இத்தாலியின் தெற்குப் பகுதிகளில் இந்தப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்குள்ள பல பாஸ்தா தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் மூலப்பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளில் இருந்த மூலப்பொருள்களின் இருப்பு குறைந்துள்ளது. இதனால் பாஸ்தா உற்பத்தியைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பானியா மாகாணத்தில் செயல்படும் ரும்மோ நிறுவனம், மூலப்பொருள்கள் கிடைக்காததால் கடந்த 19-ம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் இத்தாலியின் முக்கிய பாஸ்தா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். லாரிகள் மற்றும் மூலப்பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் வராததால் உற்பத்தியைத் தொடர முடியவில்லை. புக்லியா உள்ளிட்ட தெற்குப் பகுதிகளிலும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மொலிசே மாகாணத்தில் உள்ள லா மொலிசானா நிறுவனமும் உற்பத்தியைக் குறைத்துள்ளது. கிடங்குகளில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு நீடித்தால், மேலும் பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும் எனத் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் பாஸ்தா தயாரிப்புத் தொழில் மிகப் பெரிய உணவுத் தொழில்களில் ஒன்றாகும். அந்நாட்டில் தயாரிக்கப்படும் பாஸ்தா உள்நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, உற்பத்தி பாதிக்கப்பட்டால் உள்நாட்டு விநியோகத்துடன் ஏற்றுமதியும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தெற்கு இத்தாலியின் சில பகுதிகளில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விரைவில் அழுகக்கூடிய வேளாண் விளைபொருள்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.

லாரி போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண, போக்குவரத்து நிறுவனங்களுக்கு 150 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான நிதியுதவி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் தொடங்கிய போராட்டம் தற்போது உணவு உற்பத்தியையும், விநியோகத்தையும் பாதிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்தால் மட்டுமே லாரிப் போக்குவரத்து சீரடைந்து, பாஸ்தா உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய செய்தி
நடுத்தர மக்களின் சேமிப்பைக் கரைக்கும் உணவு பணவீக்கம்
அடுத்த செய்தி
பாரஸ் ஹெல்த்கேர் ரூ.652.5 கோடி திரட்டல்

தொடர்புடைய செய்திகள்