Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

GDP வளர்ச்சி 7.35 % -ஆக உயரும்

GDP வளர்ச்சி 7.35 % -ஆக உயரும்

இது ரிசர்வ் வங்கி கணித்துள்ள 7.20 சதவீத வளர்ச்சி கணிப்பைவிடச் சற்றுக் கூடுதலாகும்.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.35 சதவீதமாக அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி கணித்துள்ள 7.20 சதவீத வளர்ச்சி கணிப்பைவிடச் சற்றுக் கூடுதலாகும்.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அக்டோபர் மாதத்துக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: புவிசார் அரசியல் பதற்றங்கள், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய நிதிச் சூழல் இறுக்கம் ஆகிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலத்திலும் வலுவான வளர்ச்சியைத் தக்கவைக்கும்.


தொழிற்சாலை உற்பத்தி வலுவாக இருப்பது, புதிய ஆர்டர்கள் அதிகரிப்பது, உற்பத்தித் துறையின் நம்பிக்கை மேம்படுவது, தொழில் துறைக்கான கடன் வளர்ச்சி வலுவாக இருப்பது ஆகியவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளன.
அதேநேரத்தில், எரிபொருள் விலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை உற்பத்திச் செலவுகளிலும் முதலீட்டு முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


எனவே, கொள்கை ஆதரவைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெரிய அளவில் அதிகரிப்பது, உள்நாட்டு மதிப்புக் கூட்டலை மேம்படுத்துவது, ஏற்றுமதிப் போட்டித்திறனை வலுப்படுத்துவது ஆகியவை முக்கியமாகும்.


உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விநியோகத்தை நிர்வகிப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், சந்தையில் நிலவும் பணப்புழக்கம் ஆகியவை அடுத்தகட்ட பணவீக்கப் போக்கைத் தீர்மானிக்கும்.வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 'காந்தா எக்ஸ்பிரஸ்' மூலம் வெங்காயத்தைச் சந்தைக்கு விநியோகிப்பது, சர்க்கரை விற்பனையாளர்களுக்கான கையிருப்பு கட்டுப்பாடுகள், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரிக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அழுத்தத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும், தீவிரமடையும் எல் நினோ நிகழ்வு காரணமாக, அடுத்த ரபி பருவ விதைப்பின்போது மண்ணின் ஈரப்பதம் பாதிக்கப்படக்கூடும். பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரிப்பதும் பணவீக்கத்துக்கான அபாயமாக இருக்கும்.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு டாலர் பணப்புழக்கத்தை நேரடியாக வழங்குவது உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள், ரூபாய் மதிப்பில் ஏற்படும் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தவும், இறக்குமதி சார்ந்த பணவீக்கத்தைக் குறைக்கவும் உதவக்கூடும். சமீபத்திய ரெப்போ வட்டி உயர்வு பணவீக்கத்தின் இரண்டாம் கட்டத் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதில் எந்த அளவுக்குப் பயனளிக்கிறது என்பது, ரிசர்வ் வங்கியின் பணப்புழக்க மேலாண்மையைப் பொறுத்திருக்கும்.


சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியும், சேவைகள் துறையில் கிடைக்கும் உபரி வருவாயும் வர்த்தகச் சமநிலையைப் பாதுகாக்க உதவியுள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தபோதிலும், வங்கித் துறை வழியிலான மூலதன வரவுகள் அதனைச் சமாளிக்க உதவியுள்ளன.
ரூபாய் மதிப்பில் தொடர்ந்து அழுத்தம் நிலவினாலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. தற்போதைய கையிருப்பு, 10.3 மாதங்களுக்கான இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் அளவுக்கு இருக்கிறது. மேலும், வலுவான கடன் வளர்ச்சியும், சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்களும், நுகர்வு, முதலீடு, ஏற்றுமதிக்கு கூடுதல் ஆதரவளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
வார விடுமுறைக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம்
அடுத்த செய்தி
பெரம்பலூர்: 7.40 டன் சின்ன வெங்காயம் ரூ.4.40 லட்சத்துக்கு ஏலம்

தொடர்புடைய செய்திகள்