Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாடா சன்ஸ் பங்குகள் பட்டியலிடப்படுவது கட்டாயம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் திட்டவட்டம்

டாடா சன்ஸ் பங்குகள் பட்டியலிடப்படுவது கட்டாயம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் திட்டவட்டம்

நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், உயர் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றால், பங்குச் சந்தையில் பட்டியலிடுவது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனம் 2022 செப்டம்பரில் ரிசர்வ் வங்கியின் உயர் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டது. இந்த வகைப்பாட்டின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.


இதற்கிடையே, தனது முக்கிய முதலீட்டு நிறுவனப் பதிவை ரத்து செய்யக் கோரி 2024 மார்ச்சில் டாடா சன்ஸ் விண்ணப்பித்தது. இதற்காக நிறுவனம் தனது கடன்களையும் திருப்பிச் செலுத்தியது.ஆனால், நிறுவனப் பதிவை ரத்து செய்யும் கோரிக்கையை ஆர்பிஐ நிராகரித்தது. இதனால், உயர் அடுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: ஒரு நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு, முக்கிய முதலீட்டு நிறுவனமாக (சிஐசி) செயல்பட்டு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி ஆதாரங்களைப் பெற்றிருந்தால், அதற்குப் பொருந்தும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உயர் அடுக்கில் இடம்பெற்றிருந்தால், பங்குச் சந்தையில் பட்டியலிடுவது அவசியம்.


டாடா சன்ஸ் நிறுவனம், டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் முக்கிய முதலீட்டு நிறுவனமாகச் செயல்படுகிறது. இத்தகைய நிறுவனங்கள் வங்கிகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட வழிகளில் நிதி திரட்டி, குழும நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகளுடன் தொடர்புகொண்டிருப்பதால், அவற்றின் கடன் மற்றும் நிதி இடர்பாடுகள் ஒட்டுமொத்த நிதி அமைப்பையும் பாதிக்கக்கூடும் என்று ஆர்பிஐ கருதுகிறது. இதனால்தான் முக்கிய முதலீட்டு நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பதிவு செய்வதும், அவற்றுக்கு உரிய விதிமுறைகளை விதிப்பதும் அவசியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீதப் பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளைகள், பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. “பங்குச்சந்தையில் பட்டியலிடுவது நிறுவனத்தின் தனித்துவமான அடையாளத்தையே அழித்துவிடும்” என்று டாடா அறக்கட்டளைகள் தலைவர் நோயல் டாடா தெரிவித்துள்ளார்.


மறுபுறம், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.37 சதவீதப் பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை ஆதரிக்கிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், நிறுவனத்தின் நிர்வாகக் குழு பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் மாற்று வழிகளையும் பரிசீலித்து வருகிறது.
டாடா சன்ஸ் விவகாரத்தில் பங்குதாரர்கள் இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளே டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட முடிவைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன. இதனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை பட்டியலிடல் தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.



முந்தைய செய்தி
சாதனைகளை உடைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ
அடுத்த செய்தி
திண்டுக்கல், தேனி, மதுரை-க்கு `ரெட் அலர்ட்'

தொடர்புடைய செய்திகள்