Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2031-க்குள் டிஜிட்டல் தங்கச் சந்தை 170 பில்லியன் டாலராக உயரும்: உலக தங்க கவுன்சில்

2031-க்குள் டிஜிட்டல் தங்கச் சந்தை 170 பில்லியன் டாலராக உயரும்: உலக தங்க கவுன்சில்

உலகளவில் 70-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தங்க முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

உலகளாவிய டிஜிட்டல் தங்கச் சந்தை அடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைச் சந்திக்கும் என்றும், 2031-ம் ஆண்டிற்குள் இதன் மதிப்பு 160 முதல் 170 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் உடன் இணைந்து உலக தங்க கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது 45 முதல் 55 பில்லியன் டாலர்களாக உள்ள டிஜிட்டல் தங்கச் சந்தை, அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 27 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தடைகள் விரைவாக களையப்பட்டால், 2031-க்குள் இச்சந்தையின் மதிப்பு 270 முதல் 280 பில்லியன் டாலர்களாகக் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நகைகளாகவோ அல்லது தங்கக் கட்டிகளாகவோ பெருந்தொகை கொடுத்து வாங்குவதை விட, டிஜிட்டல் தளங்கள் வாயிலாக சிறிய அளவிலான தொகையைக் கொண்டு தங்கத்தை வாங்கும் முறை, இளைய தலைமுறை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டாளர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகளவில் 70-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் தங்க முதலீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் முன்னணிச் சந்தைகளாக உருவெடுத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, டிஜிட்டல் தங்கம் மூலம் சுமார் 370 டன் தங்கம் முதலீட்டாளர்களால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தங்க இ.டி.எஃப் இருப்பில் சுமார் 8 சதவீதமாகும்.

டோக்கனைஸ்டு தங்கத்தின் வர்த்தகமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டு முழுவதிலும் நடந்த வர்த்தகத்தை விட, 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே 90 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நம்பிக்கைத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலீட்டாளர்களின் சந்தேகங்களை நிறுவனங்கள் தீர்த்தால், கூடுதலாக 95 பில்லியன் டாலர்கள் அளவிற்கு புதிய முதலீடுகள் தங்கத்தில் குவிய வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் முதலீடுகள் பக்கம் மக்களின் கவனம் திரும்புவதால், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று உலக தங்க கவுன்சிலின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் டெய்ட் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களின் பரவலான பயன்பாடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மீதான ஆர்வம் காரணமாக, டிஜிட்டல் தங்கம் விற்பனையில் இந்தியா தொடர்ந்து ஒரு முக்கிய சந்தையாக விளங்கும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.மிகக் குறைந்த தொகையில் முதலீட்டைத் தொடங்கலாம் என்பது முதல்முறை முதலீட்டாளர்களையும் நடுத்தர மக்களையும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது. நிதித் தொழில்நுட்பம் முதலீட்டுப் பழக்கவழக்கங்களை மாற்றி வரும் இக்காலத்தில், பாரம்பரிய முறையில் தங்கம் வாங்குவதற்கு இணையான ஒரு சிறந்த மாற்றாக டிஜிட்டல் தங்கம் உருவெடுத்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவது சரியான அணுகுமுறை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
அடுத்த செய்தி
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகுறைப்பு

தொடர்புடைய செய்திகள்