Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்

மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்

கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 35 ரூபாய்க்கு, அதாவது 80 சதவீதம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்மிகு மாநிலமாக இருந்த தமிழகம், தவெக ஆட்சியில் மின் பற்றாக்குறை மாநிலமாக மாறி விட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது கடும் மின்வெட்டுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதுமில்லை. சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்தகால ஆட்சியில் மின்கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக கூறினார். அப்போது அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மாற்று வழியை கண்டுபிடித்து இருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.
ஆனால், அதற்கு நடவடிக்கை எடுக்காமல், மின் பற்றாக்குறை இருப்பதுபோல திட்டமிட்டு ஒரு மாயையை இந்த அரசு உருவாக்கி உள்ளது. 


கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 35 ரூபாய்க்கு, அதாவது 80 சதவீதம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கான டெண்டரை ரத்து செய்துள்ளனர்.

சிறை கைதிகள் தப்பியோட்டம், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என தவெக அரசில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி 20 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. பருப்பு 80 சதவீதமும், எண்ணெய் 50 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது. ஆவின் பொட்களும் தப்பவில்லை.
சன்னரக அரிசி வழங்குவதாக கூறுகின்றனர். இதற்கு எங்கு டெண்டர் விட்டார்கள் என்று தெரியவில்லை. நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய வைத்திருக்கும் அரிசியை பாலிஷ் செய்து ஒரு கிலோ ரூ.30-க்கு விநியோகம் செய்வதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கட்டுமான பொருட்களும் விலை உயர்ந்துள்ளன.

சசிகலா அதிமுகவில் இணைவாரா என்று கேட்கிறார்கள். டிடிவி.தினகரன் ஏற்கெனவே எங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இதுதொடர்பாக திட்டமிட்டு தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முந்தைய செய்தி
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கு வால்மார்ட் இலக்கு
அடுத்த செய்தி
அரிசி விலை விரைவில் சீரடையும் - அமைச்சர் உறுதி

தொடர்புடைய செய்திகள்