Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பனியுகத்துக்கு ‘பிரேக்’ போட்ட புவி வெப்பமயமாதல்

பனியுகத்துக்கு ‘பிரேக்’ போட்ட புவி வெப்பமயமாதல்

பார்ன்ஸ் பனிப்படலம் அடிப்பாறையுடன் சேர்ந்து உறைந்திருப்பதால், மற்ற பனியாறுகளைப்போல நகர்ந்து அடியிலுள்ள தடயங்களை அழிப்பதில்லை

பகிரவும் WhatsApp Facebook

பூமியின் அடுத்த பனியுகம் இனிமேல்தான் தொடங்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் தொடக்க அறிகுறிகள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி, புவி வெப்பமயமாதலால் தடைபட்டிருக்கலாம் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காலநிலைப் பள்ளியைச் சேர்ந்த நிக்கோலஸ் யங் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு, ‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. கனடாவின் பாஃபின் தீவிலுள்ள பார்ன்ஸ் பனிப்படலமே ஆய்வின் மையமாக இருந்தது. ஒருகாலத்தில் கனடாவின் பெரும்பகுதியையும் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளையும் போர்த்தியிருந்த பிரம்மாண்டமான லாரன்டைடு பனிப்படலத்தின் கடைசி எச்சம்தான் இது. சில இடங்களில் அந்தப் பழைய பனிப்படலத்தின் தடிமன் மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது.

பார்ன்ஸ் பனிப்படலம் அடிப்பாறையுடன் சேர்ந்து உறைந்திருப்பதால், மற்ற பனியாறுகளைப்போல நகர்ந்து அடியிலுள்ள தடயங்களை அழிப்பதில்லை. இதனால், பனி விரிவடைந்தபோது அதற்குக் கீழே புதைந்த தாவரங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. தற்போது பனி உருகி வெளிப்படும் தாவரங்களின் வயதை, கார்பன்–14 ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். அருகிலுள்ள சிறிய பனிப் படலங்களின் தடயங்களையும் ஒப்பிட்டு, பனியின் பழைய வரலாற்றை மீட்டுருவாக்கினர்.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சுருங்கியிருந்த பனிப்படலம், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் வளரத் தொடங்கியது. இந்த மாற்றத்தையே அடுத்த பனிப்பரவல் காலத்தின் தொடக்கமாகக் கருத வேண்டும் என்பது ஆய்வாளர்களின் வாதம். இது பனியுகம் தொடங்குவதை வரையறுக்கும் அவர்களது விளக்கமாகும். ஆனால், 1960-களில் நிலைமை தலைகீழானது. குளிர்காலத்தில் சேரும் பனியைவிட, கோடையில் உருகும் பனியின் அளவு அதிகரித்தது. மனித செயல்பாடுகளால் ஏற்பட்ட வெப்பமயமாதல், பனிப்படலத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கித் திருப்பியது.

இதனால், உடனடியாக உலகை உறைய வைக்கும் பனியுகம் தவிர்க்கப்பட்டது என்று பொருளல்ல. கண்டங்களை மூடும் அளவுக்கு பனி வளர மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும். அடுத்த சில நூற்றாண்டுகளில் பார்ன்ஸ் பனிப்படலம் முற்றிலும் மறையக்கூடும் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன் மறைவு, எதிர்காலத்தில் பனி மீண்டும் பெருகுவதற்கான இயற்கை தொடக்கப் புள்ளியையும் அழிக்கலாம். அதிகரித்த பசுங்குடில் வாயுக்களுடன் இருக்கும் உலகில், அடுத்த பனிப்பரவல் எப்போது ஏற்படும் என்பதை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை. பூமியின் நீண்டகால இயற்கை சுழற்சியையே மனிதர்கள் மாற்றியிருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய செய்தி
Hyundai targets 2.5 lakh annual sales for Bayon, Creta
அடுத்த செய்தி
'The Rugby Players' புகைப்படத்திற்காக இந்திய தம்பதிக்கு விருது

தொடர்புடைய செய்திகள்