Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டைனோசர்களை அழித்த விண்கல்: உலகை ஆக்கிரமிக்க எறும்புகளுக்கு உதவியதா?

டைனோசர்களை அழித்த விண்கல்: உலகை ஆக்கிரமிக்க எறும்புகளுக்கு உதவியதா?

டைனோசர்களின் அழிவுக்குக் காரணமான விண்கல் தாக்கம், பூமியில் வாழ்ந்த பல உயிரினங்களுக்கு மிகப்பெரிய பேரழிவாக அமைந்தது

பகிரவும் WhatsApp Facebook

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய பிரம்மாண்ட விண்கல், டைனோசர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்களால் உலகம் முழுவதும் எறும்புகள் பரவுவதற்கும் அவற்றின் இனங்களை பெருக்குவதற்கும் காரணமாக அமைந்திருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய அளவில் எறும்புகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஜெர்மனியின் மன்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் லூகாஸ் ஷ்ரேடர் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதன் முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸ் என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. எறும்புகளின் டிஎன்ஏவில் உள்ள 'ஜம்பிங் ஜீன்ஸ்' எனப்படும் இடம்பெயரும் மரபணுக் கூறுகள் அவற்றின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விண்கல் தாக்கத்தால் பூமியின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல உயிரினங்கள் அழிந்த நிலையில், உயிர் பிழைத்த உயிரினங்களுக்குப் புதிய வாழ்விடங்களும் உணவு வளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உருவாகின.

இந்தக் காலகட்டத்தில் எறும்புகளின் சில முக்கிய இனக்குழுக்களில் இடம்பெயரும் மரபணுக் கூறுகளின் செயல்பாடு அதிகரித்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதனால், விண்கல் தாக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்களும் மரபணு செயல்பாடுகளும் இணைந்து எறும்புகளின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருப்பினும், விண்கல் தாக்கமே இந்த மரபணு மாற்றங்களை நேரடியாக ஏற்படுத்தியது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இந்த ஆய்வுக்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 163 எறும்பு இனங்களின் மரபணுத் தொகுப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். தற்போது உயிர்வாழும் 16 எறும்புத் துணைக்குடும்பங்களில் 12 துணைக்குடும்பங்களைச் சேர்ந்த இனங்கள் இதில் இடம்பெற்றன.

அவற்றின் மரபணு அமைப்புகளை ஒப்பிட்டு, கடந்த 10 கோடி ஆண்டுகளில் இடம்பெயரும் மரபணுக் கூறுகளின் செயல்பாடு எவ்வாறு மாறியுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணித்தனர். இதன் மூலம், எறும்புகளின் முக்கிய இனக்குழுக்கள் வேகமாகப் பல்வகைப்படுவதற்கு முன்பு, அவற்றின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

டைனோசர்களின் அழிவுக்குக் காரணமான விண்கல் தாக்கம், பூமியில் வாழ்ந்த பல உயிரினங்களுக்கு மிகப்பெரிய பேரழிவாக அமைந்தது. ஆனால், அந்தப் பேரழிவுக்குப் பிறகு ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்கள் சில உயிரினங்களின் வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம். அவற்றில் எறும்புகளும் முக்கியமானவை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

படம்: Dinosaur killing asteroid

முந்தைய செய்தி
புதினை விட உயர்ந்த மனிதர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
அடுத்த செய்தி
நீதிமன்றத்தில் சரணடைந்தார் முன்னாள் எம்எல்ஏ: நவ. 12ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

தொடர்புடைய செய்திகள்