அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்கினால், பாரசீக வளைகுடாவில் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதமடையும் கேபிள்களைச் சீரமைக்கவும் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
வானிலிருந்து வரும் தாக்குதலுக்கு, கடலுக்கடியில் பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெயர்களை வெளியிட விரும்பாத இரண்டு மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்த திட்டம் குறித்துப் பேசியுள்ளனர்.
எந்த இடத்தில், எப்படி தாக்குதல் நடத்தப்படும் என்ற விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. அமெரிக்காவும், இஸ்ரேலும் புதிய தாக்குதலை நடத்தினால், அதற்கான பதிலடியாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.
கேபிள்களைத் துண்டிப்பதுடன் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்பதையும் ஓர் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகளையும் தடுத்து, இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புச் சேவைகளில் ஏற்படும் முடக்கத்தை நீடிக்கச் செய்வதே திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்கப்பட்டால், பதிலடிக்கு எந்த வரம்பும் இருக்காது என ஓர் அதிகாரி எச்சரித்துள்ளார். கடலடி கேபிள்கள் மட்டுமின்றி, ரகசியமாகச் செயல்படும் ராணுவத் தளங்களும் தாக்குதல் இலக்குகளாக மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
கடலடி கேபிள்களை அணுகவும், அழிக்கவும் ஈரானால் முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம் என்பதும் அவரது எச்சரிக்கை.
மீண்டும் போர் தீவிரமானால், அதன் தாக்கம் ராணுவத் தளங்களுடன் நின்றுவிடாமல், அன்றாடத் தகவல் தொடர்புகளுக்கும் பரவக்கூடும் என்பதையே இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது.
பாதிப்பு என்ன?
பாரசீக வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மிதக்கும் கடலுக்கு அடியில், உலகை இணைக்கும் தகவல்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டுசெல்லும் கேபிள்களைத் தாக்குவோம் என்ற ஈரானின் எச்சரிக்கை, இணையம் முதல் வங்கிச் சேவைகள் வரை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளை இந்தக் கேபிள் வலையமைப்புகள் இணைக்கின்றன. ஒவ்வொரு கேபிளும் வெவ்வேறு நாடுகளுக்குக் கிளைகளாகப் பிரிந்து செல்கிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் முக்கிய கேபிள் அமைப்புகள் ‘ஃபால்கன்’, ‘கல்ஃப் பிரிட்ஜ் இன்டர்நேஷனல்’, ‘ஏஏஇ–1’. இவற்றின் விரிந்த இணைப்புகள் இந்தியா, இலங்கை, ஐரோப்பா வரை நீள்கின்றன. வளைகுடாவையும் வெளிநாடுகளையும் இணைப்பதில் இவற்றுக்கு முக்கியப் பங்குள்ளது.
குவைத், பஹ்ரைன், கத்தார், அமீரகத்தை ‘ஃபாக்’ கேபிள் இணைக்கிறது. டாடாவின் ‘டிஜிஎன்–கல்ஃப்’ அமைப்பு இந்தியாவுடன் இணைப்பு வழங்குகிறது. நாம் அனுப்பும் தகவல்கள், மேற்கொள்ளும் இணையப் பரிவர்த்தனைகள் இத்தகைய ஒளியிழைப் பாதைகள் வழியாகவே பயணிக்கின்றன.
உலகின் சர்வதேசத் தரவுப் பரிமாற்றத்தில் 99 சதவீதத்துக்கும் மேல் கடலடி கேபிள்களையே நம்பியுள்ளது என ஐடியு தெரிவிக்கிறது. இது உலகளாவிய கேபிள்களுக்கான கணக்கு. வளைகுடா வழியாக மட்டும் இவ்வளவு தகவல்கள் செல்வதாக அர்த்தமல்ல.
பல கேபிள்கள் ஒரேநேரத்தில் துண்டிக்கப்பட்டால், இணையம் மெதுவாகலாம். சில சேவைகள் முடங்கலாம். வெளிநாட்டுக்குப் பணம் அனுப்புவது, இணையத்தில் பொருள் வாங்குவது, கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும்.
இதன் தாக்கம் வளைகுடாவுடன் முடிந்துவிடாது. அங்குள்ள நிறுவனங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளும் தடுமாறலாம். காணொலிக் கூட்டங்கள் தடைபடுவது முதல் வாடிக்கையாளர் சேவை, தரவுப் பரிமாற்றம் தாமதமாவது வரை சிக்கல்கள் வரக்கூடும்.
அதற்காக உலக இணையமே முடங்கிவிடும் என்பதில்லை. ஐரோப்பா–ஆசியாவின் முக்கிய கேபிள்கள் செங்கடல் வழியாகச் செல்கின்றன. ஹோர்முஸ் பகுதியில் கேபிள்கள் சேதமடைந்தால், நேரடிப் பாதிப்பு பெரும்பாலும் வளைகுடாவில்தான் இருக்கும் என டெலிஜியோகிராபி ஆய்வு தெரிவிக்கிறது.
பஹ்ரைன், கத்தார், குவைத்துக்கு சவுதி வழியாகத் தரைவழி இணைப்புகள் உள்ளன. அமீரகத்துக்கு ஃபுஜைரா வழியும் கைகொடுக்கும். ஆனால், மாற்றுப்பாதைகளின் கொள்ளளவு போதாவிட்டால், நெரிசலான சாலையைப்போலத் தகவல் பரிமாற்றமும் மெதுவாகிவிடும். பாதிப்பின் அளவு நிறுவனங்களின் மாற்று வசதிகளைப் பொறுத்தே அமையும்.
துண்டிக்கப்பட்ட கேபிளை இணைப்பதும் எளிதல்ல. சிறப்புக் கப்பல்கள், அனுமதிகள், பாதுகாப்பு தேவை. போர்ச்சூழல் சீரமைப்பைத் தாமதப்படுத்தினால், கடலடியில் ஏற்பட்ட சேதத்தின் விளைவுகளை கரையிலுள்ள மக்களும், வர்த்தக நிறுவனங்களும் நீண்ட காலம் எதிர்கொள்ள நேரிடலாம்.
முந்தைய செய்தி
சாய்ஸ் லாக்கிங் - அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 3,878 இடங்கள்
அடுத்த செய்தி
காட்டில் புதைந்த தங்க கனவு - நூதன முதலீட்டு மோசடி!