Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வறுமையிலிருந்து மீண்ட 25 கோடி மக்கள்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

வறுமையிலிருந்து மீண்ட 25 கோடி மக்கள்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். உடன், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உள்ளிட்டோர்.

கிராமப்புற வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்

பகிரவும் WhatsApp Facebook

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 1300 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் உண்மையான வளர்ச்சி என்பது பெருநகரங்களின் உயரமான கட்டடங்களிலும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் மட்டும் அடங்கியிருக்கவில்லை. இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் கிராமங்களின் முன்னேற்றத்தில்தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி அடங்கியுள்ளது. மகாத்மா காந்தியடிகள் வலியுறுத்திய கிராம சுயராஜ்ஜியம், தற்சார்பு பொருளாதாரம், சுதேசிக் கொள்கை ஆகியவற்றை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.
கல்வி என்பது பட்டம் பெறுவதோடு முடிந்து விடக் கூடாது. மாணவர்கள் தங்களது கல்வி அறிவையும், திறமையையும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, சமூகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.

கிராம மக்களும் நகர மக்களுக்கு இணையான கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற வேண்டும். அப்போது தான் கிராமப்புற மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை மாறும்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் சுமார் 25 கோடி மக்கள் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். வறுமை ஒழிப்பு என்பது வெறும் பொருளாதாரக் கணக்கீடு மட்டுமல்ல. ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே அதன் உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

தூய்மை என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்புமாகும். சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது. உற்பத்திச் செலவு, சந்தை விலை, நீர்ப்பாசனப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிர் கொண்டு வருகின்றனர். அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நீண்டகாலத் திட்டமிடல் அவசியமாகும்.
அந்நியப் பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் தொழில்நுட்பம், உற்பத்தி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதும் சுதேசிச் சிந்தனையின் நவீன வடிவங்களாக அமைய வேண்டும். பிரதமர் மோடி முன்வைத்துள்ள தற்சார்பு இந்தியா என்ற இலக்கும் இதனுடன் தொடர்புடையதாகும். இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், விஞ்ஞானி நம்பிநாராயணன் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், துணைவேந்தர் பஞ்சநாதன், பதிவாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

----------

படவிளக்கம்:

முந்தைய செய்தி
பெண் ஊழியருக்கு ரூ.4 கோடி சொகுசு காரை பரிசளித்த நிறுவனம்
அடுத்த செய்தி
கிரெடிட் கார்டு பயன்பாடு 6 சதவீதம் சரிவு

தொடர்புடைய செய்திகள்